கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
By : Shiva
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோவிலுக்கு தரவேண்டிய குத்தகை தொகையை உடனடியாக வசூல் செய்து கோவில் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும் என்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் சிங்கப் பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வணிக வளாகங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அதற்கு முறையாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இது தொடர்பாக அறநிலையத் துறையிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் "கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை முறையாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு புகார் அளித்துள்ளேன் ஆனால் இதுதொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி தலைமையிலான அமர்வு இது தொடர்பாக அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், கமிஷனர், கோயில் செயல் அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த பொதுநல மனு தொடர்பான விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.