குடி மையமாக மாறிய கோவில் குளம்- சீரமைத்த சீனியர் சிட்டிசன்களுக்கு குவியும் பாராட்டு.!
By : Yendhizhai Krishnan
சென்னை குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலையில் ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோயில் பிரசித்தி பெற்றது என்பதால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த கோவிலின் குளம் பராமரிப்பின்றி விடப்பட்டதால் சீரழிந்து குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது.
பல இடங்களில் தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்தும் குப்பை மற்றும் கழிவு நீர் தேங்கியும் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் சிலர் குளக்கரையை மது அருந்த பயன்படுத்தி வந்துள்ளனர். குடி மையமாகவே மாறிவிட்ட குளத்தைச் சுற்றி குடிமகன்கள் மது பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டுச் சென்றது பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.
இது குளத்தின் புனிதத்தன்மையை குலைத்தது மட்டுமல்லாது, பக்தர்களுக்கு பாதுகாப்பு குறைபாட்டையும் ஏற்படுத்தியது. குளத்தில் குப்பை நிறைந்து, கழிவு நீர் தேக்கி காணப்பட்டதால் சுகாதாரக் குறைபாடு ஏற்பட்டதோடு, பெண்கள் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் செய்தித்தாள்களில் இது குறித்து வந்த செய்தியின் அடிப்படையில் மூத்த குடிமக்களும், சமூக ஆர்வலர்களுமான இருவர், தாமாக முன்வந்து சுத்தம் செய்துள்ளனர்.
குளத்தின் அவல நிலையை பற்றி தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஓம் பேட்டை மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மற்றும் சீதாபதி என்ற சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து குளத்தை சீரமைக்க முடிவு செய்தனர். இவர்கள் இருவரும் புறத்திற்கு சென்று அங்கு கிடந்த குப்பை பிளாஸ்டிக் மதுபாட்டில்கள் ஆகியவற்றை அகற்றியதோடு அப்பகுதி மக்களிடையே குப்பை போடுவதை தடுத்து குளத்தை பாதுகாக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
கோவில்களில் நடக்கும் அவலங்களை கண்டும் காணாமல் செல்பவர்கள் மத்தியில் மூத்த குடிமக்களாக இருந்தும் தாங்களாகவே முன் வந்து குளத்தை தூய்மைப்படுத்திய முதியவர்கள் இருவருக்கும் அப்பகுதி மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.