கண்மாயில் கிடந்த கோவில் கலசம்-கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை!
By : Shiva
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கோவில் கலசம் ஒன்று கண்மாயில் கிடந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் என்ற கிராமத்தில் சாலைகுளம் கண்மாயில் இரண்டு அடி உயரம் உள்ள கோவில் கலசம் ஒன்று ஒரு பெரிய கம்புடன் இணைக்கப்பட்டு அதன் அடிப்பகுதியில் கல் கட்டப்பட்டு கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் வயல் வேலைக்காக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த நாலாட்டின்புதூர் காவல்துறை அதிகாரிகள் கோவில் கலசத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் கலசம் இரண்டு அடி உயரத்தில் செம்பினால் ஆனது என்று தெரியவந்தது. இந்த கலசம் 10 அடி நீளமுள்ள கம்புடன் கட்டப்பட்டிருந்தது. அந்த கம்பில் அடிப்பகுதியில் ஒரு பெரிய கல்லும் கட்டப்பட்டிருந்தது.
இதனால் கோவில் கலசத்தை திருடிச் சென்றவர்கள் கலசத்தை கம்பில் கட்டி அந்த கம்பில் கல்லை கட்டி பின்னர் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கண்மாயில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கலசத்தை திருடிச் செல்லும்போது கண்மாயில் வீசி சென்றார்களா அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக கோவில் கலசம் ஆற்றில் வீசப்பட்டதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. கண்மாயில் கோவில் கலசம் கிடந்த சம்பவத்தினால் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.