மரத்தைக் கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள்- கோவில் சொத்துக்கள் பறி போகும் அவலம்!
By : Shiva
பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டீஸ்வரர் சுவாமி கோவிலில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையம் என்னுமிடத்தில் பிரசித்தி பெற்ற பாண்டீஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயிலாக இருக்கும் இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்தக் கோவில் வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தன மரம் ஒன்று வைக்கப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள சந்தன மரத்தை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் சிலர் அடிப்பாகத்தில் வெட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பாக சந்தன மரத்தை சுற்றி இரும்பு குழாய் அமைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் சுமார் 30 அடி உயரமுள்ள சந்தன மரத்தை நேற்று மர்ம நபர்கள் அடியோடு வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சந்தன மரம் வெட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது தொடர்பாக குச்சிபாளையம் காவல்துறைக்கு கோவில் செயல் அலுவலர் கலைவாணி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. சம்பவத்தின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டப்பட்ட இந்த சந்தன மரத்தை குச்சிப்பாளையம் அருகே உள்ள தேங்கரம்பாளையம் அருகே உள்ள காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் சந்தன மரத்தில் இருந்த உள் பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு வெளிப்புற பட்டையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவிலில் வைக்கப்பட்டுள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றுள்ளதால் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.