சித்திரை திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்!
By : Shiva
கொரோனா விதிமுறைகளுடன் சித்திரை திருவிழாவை நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவும் நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நோய் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள் நடத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் மதுரையில் விமர்சையாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் கோவிலில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கோவிலில் இருக்கும் மண்டபங்களில் நடக்கும் திருமணத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்க கூடாது என்றும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, இஸ்லாமியர்கள் 8 மணி வரை தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருந்தது.பிறகு இஸ்லாமியர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து இரவு நேர தொழுகையை 10 மணி வரை நடத்திக் கொள்ளலாம் என்று அரசு ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது. அதேபோல் சினிமா தியேட்டர்களும் 50 சதவித இருக்கைகளுடன் இயங்கி வருகிறது. மதுபான கடைகளும் இரவு 10 மணிவரை இயங்கி வருகிறது.
ஆனால் சித்திரை திருவிழாவிற்கு மட்டும் அரசு தடை விதித்துள்ளது. சித்திரை திருவிழாவும் கொரோனா வழிபாட்டு விதிமுறைகளுடன் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த வருடமும் கொரோனா நோய் கட்டுப்பாடு காரணமாக மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த வருடம் சித்திரை திருவிழா நடத்துவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.