தி.மு.க, ம.தி.மு.க பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை - தமிழகத்தில் 21,289 ரெளடிகள் மீது பாய்ந்த நடவடிக்கை!

By : Muruganandham
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக, மதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் வீட்டுக்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை மாலை 3.50 மணி அளவில் 3 கார்களில் சென்று சோதனை நடத்தினர்.
அதே போல தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகர் வீட்டுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை மேற்கொண்டனர். திமுக கூட்டணி கட்சி குறித்து இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போலவே தேர்தல் முன்னெச்சரிக்கையாக, தமிழகம் முழுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதில், 732 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.18,183 பேரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. பிடியாணை உள்ள 14,343 பேரை தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் இதுவரை 18,593 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை தரப்பும் எடுத்து வருகிறது.
