குன்றத்தூர் முருகன் கோவிலில் அடிப்படை வசதி கூட செய்து தராத அறநிலையத்துறை! #FreeTNTemples
By : Shiva
குன்றத்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி குப்பைகள் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதோடு அங்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உருவாகியுள்ளது.
குன்றத்தூர் என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டுமே. இந்தக் கோவில் அடிவாரத்தில் உள்ள 14 கல்மண்டபத்தில் இருந்து மலைக்கு செல்ல 84 படிக்கட்டுகள் உள்ளன. 800 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் சிறப்பு அம்சங்களுடன் சிறந்து விளங்கியது என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த கோவில் வெளியே பராமரிப்பின்றி அசுத்தமாக காணப்படுகிறது.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் மேற்பகுதியிலுள்ள நுழைவுவாயில் அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கோவிலில் திரும்பும் திசையெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பக்தர்கள் சாப்பிட்டு போட்ட இலைகள் மற்றும் உணவுப் பொருள்கள் ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்பட்டு வருகிறது.
மேலும் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக புதிதாக கட்டப்பட்ட கழிவறை இன்றுவரை பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் கோவிலுக்கு பின்புறம் இருக்கும் புதருக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ளே சுத்தமாகவும் கோவிலுக்கு வெளியே பராமரிப்பின்றி அசுத்தமாக இருப்பதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு குன்றத்தூர் முருகன் கோவிலை முறையாக பராமரித்து அனைத்து வசதிகளும் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அர்ச்சனை, பூஜை என்று எல்லாவற்றுக்கும் கட்டணம் வசூல் செய்யும் அறநிலையத்துறை அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் பக்தர்களை சிரமத்துக்கு உள்ளாக்குவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.