Kathir News
Begin typing your search above and press return to search.

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூத்ததேவி சிலை கண்டெடுப்பு - காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூத்ததேவி சிலை கண்டெடுப்பு - காஞ்சிபுரத்தில் பரபரப்பு!
X

ShivaBy : Shiva

  |  20 May 2021 11:23 AM IST

உத்திரமேரூர் அருகே சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர்கால மூத்த தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வயலூர் அருகே உள்ளம்பாக்கம் என்னும் கிராமத்தில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூத்த தேவி சிலை எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு அருகே புனரமைப்பு பணிகள் செய்யும் போதெல்லாம் அங்கு ஜேஷ்டாதேவி சிலை கண்டெடுக்கப்பட்டது பழக்கமாக இருந்து வருகிறது.

நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்து வந்த ஜேஷ்டாதேவி குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களிலும் அவ்வையார் போன்ற புலவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சிலைக்கு இடப்பக்கம் மகள் மாந்தியும் வலது பக்கம் மகன் மாத்தன் மாட்டுத் தலை போன்ற வடிவிலும் காணப்படுகின்றனர். இந்த தேவியின் தலைக்குமேலே காக்கை சின்னம் உள்ளது.













தற்போது உத்திரமேரூர் அருகே கண்டெடுக்கப்பட்ட சிலையும் இதேபோல் உள்ளது. இந்த சிலை ஒன்றரை அடி உயரம் வெளியில் தெரியுமாறு இருக்கிறது. எஞ்சிய பகுதிகள் அனைத்தும் பூமிக்கு அடியில் புதைந்து காணப்படுகிறது. இந்த சிலையின் கழுத்தில் கரண்ட மகுடத்துடன் அணிகலன்களோடும், தோள்பட்டையில் வளையல்களும், கையில் காப்பும் காணப்படுகிறது. தேவிகளில் மூத்த தேவி என்பதால் இந்த தேவி சிலையை மூத்த தேவி என்று அழைத்து வந்தனர். அதுவே காலப்போக்கில் மருவி மூதேவி என்று ஒரு கருத்து தோன்றியதால் இந்த சிலை வழிபாடு இல்லாமல் போயிருக்கிறது.

இதனால் கோவில்களில் இருந்த இந்த சிலையை எடுத்து பூமிக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர் என்ற செய்தியும் உள்ளது. இதுபோன்று வரலாற்று சிலைகள் கிடைக்கும்போது அதனை தொல்லியல் துறையினர் பாதுகாக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News