"ராமனையும் கிருஷ்ணனையும் பூஜிக்க மாட்டேன்" ஐபிஎஸ் அதிகாரி எடுத்துக் கொண்ட உறுதிமொழியால் அதிர்ச்சி.!
By : Yendhizhai Krishnan
தெலங்கானா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் "இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதன் கடவுள்களை பூஜிக்க மாட்டேன்" என்று உறுதி எடுத்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கலாம் என்று இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான செயலராக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ் பிரவீண் குமார் தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இவர் தொடங்கிய SWAERO என்ற தலித்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரச்சாரத்தில் தான் இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.
SWAERO கொள்கைகளைப் பின்பற்றுபவர்களின் ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில் "எனக்கு இந்து மதத்தின் மீதும் கடவுள்கள் மீதும் நம்பிக்கை இல்லை. நான் அவர்களைப் பூஜிக்க மாட்டேன். எனக்கு ராமனின் மீதோ கிருஷ்ணனின் மீதோ நம்பிக்கை இல்லை. நான் அவர்களைப் பூஜிக்க மாட்டேன். எனக்கு கௌரி மீதோ கணபதி மீதோ இதர இந்து தெய்வங்கள் மீதோ நம்பிக்கை இல்லை." என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பலரும் இந்துக்களுக்கு எதிராக வன்மத்தைப் பரப்பம் விதத்திலும், மிஷனரிகள் புதிதாக மதம் மாற்றியவர்களை தங்களது தாய் மதத்தை வெறுக்கும் வகையில் சொல்லிக் கொடுப்பது போன்றும் உள்ளது என்று சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்து கடவுள் சிலைகளை காலால் எட்டி உதைத்ததாகவும் மதம் மாற்றியவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டியதாகவும் பேசிய பிரவீண் சக்ரவர்த்தி என்ற கிறிஸ்தவ மத போதகரை ஆந்திர காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் குமார் பெடப்பள்ளி மாவட்டத்தில் உள்ள துலிக்கட்டா புத்தக் கோவிலில் நடைபெற்ற SWAERO அமைப்பின் புனித மாத தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பத்தினர் இந்த உறுதிமொழியைக் கூறியதாகவும் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புத்த மதத்தை தழுவிய போது அம்பேத்கர் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் இந்த உறுதிமொழியை புத்தரின் சிலை நிறுவப்பட்ட நிகழ்ச்சியில் அந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் கூறியதாகவும் அந்த குடும்பத்தினருடன் SWAERO அமைப்புக்கோ அல்லது தனிப்பட்ட முறையில் தனக்கோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இது யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு தாங்கள் வருத்தம் தெரிவிப்பதாகவும் தனது விளக்கக் கடிதத்தில் பிரவீண் குமார்
கூறியுள்ளார்.
எனினும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆன பிறகு தங்கள் மீது விழுந்த 'இந்து எதிர்ப்பு' பிம்பத்தை மாற்றவே இந்த மாதிரியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்கள் இரண்டிலும் மிஷனரிகளின் அட்டகாசமும் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
SWAERO அமைப்பு மூலம் கல்வி உதவி பெற்றவர்கள் பலர் அரசு பதவிகளிலும் பெரிய கல்வி நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர். அவர்களும் இந்த உறுதிமொழி எடுத்துக் கொண்டார்களா, அப்படியெனில் இந்து மதம் குறித்து அவர்களின் நிலைப்பாடு என்ன என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.