Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்: நிகழ்வுகளின் பின்னணி !

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்: நிகழ்வுகளின் பின்னணி !

Saffron MomBy : Saffron Mom

  |  18 Aug 2021 1:24 PM GMT

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சில தினங்களில் தலிபான்கள் விரைவாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். காபூல் வரை முன்னேறி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றி ஆப்கானிஸ்தானுக்கு, இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று மறு பெயரும் சூட்டினர்.

அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து, அமைதிக்காகவும் ரத்தம் சிந்துவதை தவிர்ப்பதற்காகவும் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஒரு முகநூல் பதிவில் தெரிவித்து விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கும் அங்கு வசிக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் பாதுகாப்பான வழி ஏற்படுத்தி விட்டு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக வெளியேற அமெரிக்கா முடிவு எடுத்தது. அதன் முடிவுதான் ஆப்கானிஸ்தானின் தற்போதைய குழப்பங்கள்.

ஆப்கானிஸ்தானில் அதிகார பரிமாற்றம் குறித்து தலிபான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசு ஆகிய மூன்று பக்கங்களின் பிரதிநிதிகள் கத்தாரில் உள்ள தோகாவில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது இவை அத்தனையும் நிகழ்ந்து முடிந்தது. காபூலை தலிபான்கள் சுற்றிவளைத்த பிறகு அஸ்ரப் கானி ஞாயிற்றுக்கிழமை அன்று தஜிகிஸ்தான் சென்று அங்கிருந்து ஓமன் தப்பி சென்றார்.

கனியின் கீழ் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை, காபூலில் நுழைய மாட்டோம் என்று தலிபான்கள் அமெரிக்காவிடம் வாக்கு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த தலிபான்கள் 1990களில் இருந்து வேறுபட்டதா?

ஆப்கான் அரசுக்கு விசுவாசமாக இருந்தவர்களை பழி வாங்க மாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக அனைத்து செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. வீடுவீடாகச் சென்று அமெரிக்க ராணுவத்திற்கும், ஆப்கானிஸ்தான் அரசிற்கும் ஆதரவு அளித்தவர்களை தலிபான் கொல்வதாக பல செய்திகள் வருகின்றன.

இதனால் தான் ஆப்கானிஸ்தானிலிருந்து தஜிகிஸ்தான், ஈரான் துருக்கியை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இதில் அமைச்சர்களும் அடக்கம். இதில் சிலர் இந்தியாவை தேடியும் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மக்களை வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுவித்திருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். 1979 இல் ரஷ்யா படையெடுப்பு, 2001 இல் அமெரிக்காவின் படையெடுப்பை இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறுகையில், ஆப்கானிஸ்தான் போரை ஐந்தாவது அமெரிக்க அதிபரிடம் ஒப்படைக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார். அமெரிக்காவில் 2001 செப்டம்பரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பிறகு ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆப்கானிஸ்தான்மீது போர் தொடங்கினார். அந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக தான் ஆட்சியில் இருந்த எட்டு வருடங்களிலும் முயற்சி செய்தார். அடுத்ததாக வந்த பராக் ஒபாமா மற்றும் அவரது படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் பிறகு டிரம்ப் ஆட்சிக்கு வந்தார். அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஆப்கானிஸ்தானில் ஒரு தேசத்தை உருவாக்க பயன்படுத்தப்பட மாட்டாது என அவர் உறுதி அளித்தார். தலிபான்களுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பிடென் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போரின் செலவுகள் குறித்து ஒப்புக்கொண்டார். எனவே ஆப்கானிஸ்தானில் இருந்து அவசரமாக வெளியேறினார்.

இறுதியாக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஆண்டனி பிலிங்கன் அமெரிக்க தொலைக்காட்சி சேனலுக்கு, "ஆப்கானிஸ்தானுக்கு சென்றதற்கான நோக்கம் நிறைவேற்றப்பட்டது என்றும் இது ஒரு வெற்றிகரமான மிஷன்" என்று தெரிவித்து விட்டார்.

சமூக வலைதளங்களில் இதுகுறித்து வரும் கருத்துக்களை பார்க்கையில், அமெரிக்கா 20 வருடங்களுக்கு முன்னால் ஆப்கானிஸ்தான் வந்து இறங்கிய போது தாங்கள் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் சென்று விட்டதாக கருதுகிறார்கள்.

இந்த உலகம் கடந்த இருபது வருடங்களில் மிகவும் மாறிவிட்டது. ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்கான் அரசாங்கத்திற்கும் அதன் ராணுவத்தை பராமரிப்பதற்கும் அமெரிக்கா செலவளிக்க வேண்டியதாய் இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செய்திகளின் படி பார்த்தால் அமெரிக்க ஆதரவு அரசாங்கம் அனைத்து நிலைகளிலும் முற்றிலும் ஊழல் நிறைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

முக்கியமாக தலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் ஆப்கானிஸ்தானில் மதரஸாக்களை கட்டுப்படுத்தினர். அமெரிக்கர்கள் அந்த நாட்டின் கல்வி அமைப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டனர். 1990களில் தலிபான் எப்படி ஊழலை ஒழிப்பதாக கூறி நாட்டை கைப்பற்றினார்களோ, அதே வாக்குறுதிகளை தற்பொழுதும் அளித்துள்ளனர்.

சர்வதேச அளவில் பல நாடுகளும் விமர்சித்தாலும் தலிபான்களுக்கு எதிரான ஆப்கான் அரசின் போரில் ஆப்கான் அரசுக்கு உதவிக்கு யாரும் வரவில்லை. ஆனால் இதற்கு மாறாக தலிபான்கள், பாகிஸ்தான், சவுதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றனர். இஸ்லாமிய நாடுகள் பொதுவாக தலிபான்களை விமர்சிப்பதில் இருந்தோ, அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதில் இருந்து விலகியே இருந்தனர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI பல நாடுகளிலிருந்து நிதிகளை தலிபான்களுக்கு அனுப்ப உதவி செய்தனர். ஓபியம் வர்த்தகத்தின் மூலமாக சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான டாலர்களை தலிபான் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. தலிபான்களின் இத்தகைய போதைப்பொருள் வர்த்தகம் ISIயால் உருவாக்கப்பட்ட பல நெட்வொர்க்குகள் மூலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

1990-களில் போலல்லாமல் தற்பொழுது தலிபான்களுடன் பேச்சு நடத்த இந்தியா வழிகளை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா அங்கிருந்த தூதரகங்களை மூடி அதிகாரிகளை வெளியேற்றி விட்டாலும், பொறுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கும் முடிவில் இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தலிபான்களின் ஆதிக்கம், அங்கிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பெரும் ஆதரவை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. பாகிஸ்தான், தலிபான்களுக்கு நண்பனாக வழிகாட்டியாக செயல்பட்டு, லக்ஷர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகளுக்கும் ஆதரவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Cover Image Courtesy: Al jazeera

Next Story
கதிர் தொகுப்பு
Trending News