ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா!
ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல், இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
By : Parthasarathy
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து, இந்தியா உட்பட 10 நாடுகள் தற்போது தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இல்லாத ஒவ்வொரு நாடும் மாதம் ஒரு முறை கவுன்சிலுக்கான தலைமை பொறுப்பை ஏற்று வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், தற்போது ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்ட பின்னர் இந்தியாவிற்கான நிரந்தர தூதர் டி.எஸ் திருமூர்த்தி பேசுகையில் " ஜூலை மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமைதாங்கி சிறப்பாக வழிநடத்தியதற்காகவும், இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததற்காகவும் பிரான்ஸ் நாட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் தலைவர் பதவியில் இருக்கும் காலத்தில் 3 உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சர்வதேச அமைதியை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், தலைமை பதவியில் இந்தியா செயல்படும்." என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட நாம் (இந்தியா) மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் ஆர்வமாக உள்ளோம். இந்தியா எப்போதும் மிதவாதிகளின் குரலாகவும், சர்வதேச சடடங்களின் ஆதரவாளராகவும், பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் நாடாகவும் இருக்கும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source:Hindu Tamil
Image Courtesy: News Track English