அந்நியன் ரிமேக் பட விவகாரம் : இயக்குநர் ஷங்கர் அளித்த பதில்!
By : Amritha
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர்.அந்தவகையில் இயக்குநர் ஷங்கர் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்கிய 'அந்நியன்' திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்கள் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என்றும் அந்த படத்தின் கதையை தான் விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஷங்கர் தரப்பில் இருந்து தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது. 'அந்நியன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்தப் படத்தின் டைட்டிலில் கூட கதை திரைக்கதை மற்றும் இயக்கம் என்று எனது பெயரில் தான் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் நான் என்னுடைய கதை திரைக்கதை உரிமையை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் அந்த படத்தில் வசனம் மட்டுமே எழுதினார் என்பதும் அதற்கு மட்டுமே அவர் ஊதியத்தை பெற்றார் என்றும் அவர் எந்த வகையிலும் கதை திரைக்கதை ஆகியவற்றில் ஈடுபடவில்லை என்றும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் 'அந்நியன்' கதை பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் அதை வேறு மொழிகளுக்கு பயன்படுத்த தனக்கு உரிமை உண்டு என்றும் அதன் உரிமைகள் எழுத்துப்பூர்வமாக யாருக்கும் தான் வழங்கவில்லை என்றும் உங்களுக்கோ உங்களுடைய நிறுவனத்திற்கோ அந்த கதையின் முழு உரிமை கிடையாது என்றும் ஷங்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.