தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகருக்கு கொரோனா பாதிப்பு: பதட்டத்தில் ரசிகர்கள்!
By : Amritha
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரது பண்ணை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது செயலாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
மேலும் இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு தீவிரம் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் ரன்வீர் கபூர்,சச்சின், நடிகர் அமீர்கான், ஆலியாபட் தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகர் பவண் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பவண் கல்யாணின் செயலாளர் ஹரிபிரசாத் அவர்கள் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பவண் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனினும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து பவண் கல்யாணை அவரது குடும்ப மருத்துவரும் அப்போல்லோ மருத்துவமனை நிபுணர் குழுவினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்த நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி இருந்ததால் இரண்டாவது முறையாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது எனத் தெரிவித்து உள்ளார்.