"தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்" - இயக்குனர் மறைவு குறித்து கமல் உருக்கம்..!
By : Mohan Raj
"தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்" என இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் மறைவிற்கு உருக்கமாக தன் இழப்பை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தருவாய் வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இன்றும் விரும்பி பார்க்கப்படும் பல திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குத் தந்தார். அவரது நீட்சியாக மகன் ஜி.என்.ஆர். குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார்.
கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்துப் பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டிற்கு கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். இன்று அந்த வீட்டிற்கு 30 வயதாகி இருக்கக் கூடும். ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள்.
நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும், தம்பி இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும், குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.