'இந்த படத்தின் கதை உலகத்துக்கே பொருத்தமான ஒன்று' : சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர்..!
By : Mohan Raj
"'கே.ஜி.எப் 2' படம் எப்போது வெளிவந்தாலும் அது மிகவும் பிரஷ்ஷாக இருக்கும்" என கே.ஜி.எப்'ன் இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
2018'ம் ஆண்டு வெளிவந்து கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் அனைத்து தரப்பின் ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் வரவேற்பால் கே.ஜி.எப் படக்குழு இதனை இரண்டாம் பாகமாக எடுக்க திட்டமிட்டு படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ளது. கொரோனோ காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியாகி உலக சாதனையையும் படைத்தது. 190 மில்லியன் வரவேற்பை இதுவரை பெற்றுள்ளது. படத்தை அடுத்த மாதம் 16ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள். ஆனால் கொரோனோ காரணமாக தள்ளிப்போகுமா என விரைவில் தெரியும்.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் பற்றி இதன் இயக்குனர் பிரஷாந்த் நீல் கூறுகையில், "உலகமே இந்த கொரோனா தொற்றால் தவித்துக் கொண்டிருக்கிறது. நாமும் மற்றவர்களைப் போலவே நம்மையும், நமது குடும்பத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் தொற்று நம்மையும் தாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் மக்களை நாம் எப்படி தியேட்டர்களுக்கு வாருங்கள் என்று கேட்க முடியும். நமது வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டு வருடத்தை அழித்துவிட வேண்டும் அல்லது பாசிட்டிவ்வாக நினைத்தால் இதை ஒரு பிரேக் என எடுத்துக் கொள்ள வேண்டும்.
'கே.ஜி.எப் 2' படம் எப்போது வெளிவந்தாலும் அது மிகவும் பிரஷ்ஷாக இருக்கும். படத்தின் கதை உலகத்துக்கே பொருத்தமான ஒன்று. ஒரு பீரியட் படமாக இருந்தாலும், இப்போதைய சூழலுக்கு ஏற்ற கதையாக இல்லாமல் இருந்தாலும், அது எப்போது வெளியானாலும் தானாகவே பிரஷ்ஷாக பீல் செய்ய வைக்கும்," என்று தெரிவித்துள்ளார்.