"தம்பி வா! தலைமை ஏற்க வா!" நடிகர் விஜயை அடுத்த முதல்வராக்க தூண்டும் ரசிகர்கள்!

"தம்பி வா! தலைமை ஏற்க வா!!" என தி.மு.க-விற்கு தலைமை ஏற்க நடிகர் விஜயை வரவேற்று திண்டுக்கல் பகுதியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை ஜூன் 22-ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளம், பேனர்கள், போஸ்டர்கள் மூலம் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து 'விஜய் 65' படத்தின் முதல் பார்வை வெளியிட உள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன.
இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் அரசியல் என்டரி குறித்த இன்னொரு போஸ்டரையும் வெளியிட்டு மேலும் பரபரப்பு கூட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, "தம்பி வா; தலைமை ஏற்க வா" என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.க-வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.