"ப்ரோ டாடி"யில் காமெடி கதகளி ஆடவிருக்கும் மோகன்லால், ப்ரித்விராஜ் கூட்டணி!
By : Mohan Raj
'லூசிபர்'க்கு அடுத்த படைப்பான 'ப்ரோ டாடி' படத்தில் காமெடி கதகளி ஆடவிருக்கும் மோகன்லால், பிரித்விராஜ் கூட்டணி. மலையாளத்தில் கடந்த 2019ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் லூசிபர். மோகன்லால் நடித்த இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார் பிரித்விராஜ் சுகுமாரன். அண்டர்கிரவுண்ட் டான் கதாபாத்திரத்தில் மோகன்லால் கலக்கியிருப்பார்.
இந்த நிலையில், தற்போது 'ப்ரோ டாடி' என்கிற தனது இரண்டாவது படத்தையும் மோகன்லாலை வைத்தே இயக்குகிறார் பிரித்விராஜ். ஆனால் லூசிபர் படத்திற்கு அப்படியே நேரெதிராக இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு கதை எழுதியுள்ள ஸ்ரீஜித் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த கதை பற்றி கூறும்போது, "பிரித்விராஜ் நடத்திவரும் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த கதையை படமாக்க வாய்ப்பு கிடைக்குமா என முயற்சித்தேன்.. இந்த கதையை கேட்க ஆரம்பித்த பிரித்விராஜ், கதையை சொல்லி முடிக்கும்வரை அடக்கமுடியாமல் அவ்வப்போது சிரிப்பை வெளிப்படுத்தினார். ஒருவாரம் கழித்து அவரே போன்செய்து இந்தப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் படத்தை தானே இயக்கப் போவதாகவும் கூறியது இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக இருந்தது" என்றார்.