மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் வெற்றி கூட்டணி!
By : Mohan Raj
த்ருஷ்யம் வெற்றிக் கூட்டணியான மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் இணைகிறது.
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த படம் திரிஷ்யம். தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.
இதன் இரண்டாம் பாகமும் சமீபத்தில் ஓ.டி.டி'யில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணையவுள்ளது. இப்படத்தின் தலைப்பு 'ட்வெல்த் மேன்' (12th Man) என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிஷ்யம் படத்தின் அடுத்த பாகமாக அல்லாமல், புதிய திரில்லர் கதையில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாக இயக்குனர் தரப்பு தெரிவித்துள்ளது.