Kathir News
Begin typing your search above and press return to search.

'சார்பட்டா பரம்பரை' - அ.தி.மு.க மீது இயக்குனர் பா.ரஞ்சித்க்கு ஏன் அவ்வளவு வெறுப்பு?

சார்பட்டா பரம்பரை - அ.தி.மு.க மீது இயக்குனர் பா.ரஞ்சித்க்கு ஏன் அவ்வளவு வெறுப்பு?

Mohan RajBy : Mohan Raj

  |  23 July 2021 9:15 AM GMT

"சார்பட்டா பரம்பரை" - இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் என பட்டாளமே பரம்பரை பிரிவுகளாக நடித்திருக்கும் வடசென்னை கதைக்கள படம்.


கதை மாந்தர்கள் தேர்வு, அனைவருக்குமான காட்சியமைப்புகள், குத்து சண்டையின் நுணுக்கங்களுடன் கூடிய காட்சியமைப்புகள், 70-80'களின் களம், அரங்கு அமைப்புகள் என படத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் முதல் ஒரே காட்சியில் தோன்றும் கதாபாத்திரமாகட்டும் அனைவரின் உழைப்பும் அப்பட்டமாக தெரிகிறது. அந்த வகையில் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். அடுத்த படைப்பின் எதிர்பார்ப்பை இப்பொழுதே ஏற்றிவிடுகிறார்கள்.

உழைப்பு, விளையாட்டு, அரசியல் என கலந்த வாழ்க்கை முறையில் வாழும் வட சென்னை பகுதி மக்களின் உடல்மொழி, நடை,உடை, பாவனை என அனைத்திரும் கச்சிதம். பசுபதியின் வட்ட காலர் வைத்த ஜிப்பா, கட்சி கரை துண்டு, வேட்டி, ஆர்யா, கலையரசனின் இறுக்கமான சட்டை மற்றும் பெல்பாட்டம் வகையான உடைகள், 70'களின் வீட்டு மாந்தர்களை நினைவுபடுத்துகின்ற இரண்டு பெரிய கல் வைத்த மூக்குத்தி மற்றும் பூ போட்ட புடவைகள், மெட்ராஸின் சிகப்பு கலர் பல்லவன் பேருந்து, துறைமுக மூட்டை தூக்கும் ஷெட், பின்னணியில் மான் படம் வரைந்த ஸ்டுடியோ, மர நாற்காலி போடப்பட்ட உணவகங்கள், கீற்று பந்தல், வரைந்த கட்-அவுட் வைத்த விளையாட்டு அரங்கம், கலையரசனின் கிளாசிக் மாடல் புல்லட் முதல் ஆர்யா'வின் பெட்டி வைத்த சைக்கிள் வரை அனைத்தும் கன கச்சிதம்.

ஆனால் திரைக்கதை? எண்ணற்ற கதைமாந்தர்களை வைத்துக்கொண்டு நன்கு துவங்கிய கதைக்களம் பின் விளையாட்டா? அரசியலா என தடுமாறி கடைசியில் விளையாட்டில் முடிகிறது.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது இயக்குனர் பா.ரஞ்சித்'க்கு என்ன கோபம்? "நான் தி.மு.க'காரன் பயப்படமாட்டேன்" என கருப்பு, சிவப்பு கரை வேட்டியுடன் கைது செய்ய வரும் காவல்துறை அதிகாரியிடம் பசுபதி பொங்குவதாகட்டும், 'செங்கோட்டை தகர்க்கப்படும்' என மைக் பிடித்து பொங்குவதாகட்டும், நம்ம ஆட்சிய கலைச்சிட முடியுமா? தலைவர் விட்ருவாரா என கருணாநிதி புராணம் பாடுவதாகட்டும், "மிசா'வாம்! பாவம் கருணாநிதி புள்ளை ஸ்டாலினே தூக்கி உள்ள வச்சுட்டாங்கப்பா" என வலிய வந்து வாசிப்பதாகட்டும் தி.மு.க பிரமுகர், கரை வேட்டிகளை சமூக காவலாளிகளாக காண்பித்து அழகு பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித் அ.தி.மு.க'காரர்களை அப்படியே மாற்றி காண்பித்துள்ளார்.


எம்.ஜி.ஆர் ரசிகனா வர்ற மாஞ்சா கண்ணன் நடை, பாவனைகள் எல்லாமே காமெடியன் ரகம், போதாக்குறைக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுறது, இரண்டு கும்பல்களுக்கு இடையே புகை மூட்டும் வேலையை பார்ப்பது, தனது அம்பாஸிட்டர் காரில் பட்டாக்கத்தி வைத்துக்கொண்டு சுற்றுவது, 'பாக்ஸிங் பழகிய இளைஞர்கள் கிடைத்தால் துறைமுகத்தையே நான் கைக்குள்ள போட்டுக்குவேன்' என ரவுடியிச பெருமை பேசுவது, தைல மரக்காட்டில் ஊறல் போட்ட கும்பலை விரட்டி விட்டு அதே ஊறல் தொழிலை துவங்குவது என அ.தி.மு.க'கார்களின் பிம்பத்தை ரவுடி, சாராய வியாபாரி என பதிவு செய்துள்ளார்.


போதாக்குறைக்கு கலையரசன் பசுபதி'யின் மகனாக தி.மு.க சார்பில் இருக்கும் போது விளையாட்டில் கவனமும், அ.தி.மு.க'வில் சேர்ந்த உடன் கையில் அ.தி.மு.க'வின் கொடியை பச்சை குத்திக்கொண்டு ஊறல் போட துவங்குவதாகட்டும் அ.தி.மு.க'வினரை இவ்வளவுதான் நீங்க என பதிவு செய்துள்ளார் பா.ரஞ்சித்.


சிறையில் மிசா'வில இருந்து வரும் பசுபதியிடம் ஒரு நண்பர் "பாத்தியா உன் புள்ளைய எங்க போய் சேர்ந்து என்ன வேலைய பாரக்க்குறான்"ன்னு கேட்க வைத்துவிட்டு அ.தி.மு.க'வில் சேர்ந்ததை அவமானமாகவும், அதன் காரணமாகவே சாராய வியாரபாரியாக மாறியதையும் அழுத்தமாகவே பதிந்துள்ளார் பா.ரஞ்சித். ஏன் இனி அ.தி.மு.க'வில் கேட்க ஆள் இல்லை என்றா இயக்குனரே?

தனியாக ஒவ்வொருவரின் உழைப்பையும் சிறப்பாக வாங்கி அதில் தன் கருத்தை இஷ்டத்திற்கு புகுத்தி ஏன் படைப்பாளி என பெயர் வாங்க வேண்டும்?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News