மம்முட்டியை தொடர்ந்து துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று

நடிகர் மம்முட்டியை தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்து வருகிறார்கள். முதல் இரண்டு அலைகளை ஒப்பிடும் போது மூன்றாம் அலையின் பரவும் வீரியம் அதிகமாக உள்ளது. குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்கள் இந்த மூன்றாம் அலையில் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது 'சி.பி.ஐ 5' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து தற்பொழுது அவரது மகனும் பிரபல இளம் நடிகருமான துல்கர் சல்மான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.