தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் - சிம்பு தொடர்ந்த வழக்கில் அதிரடி

நடிகர் சிம்புவுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு "அன்பானவன், அடங்காதவன், அசராதவன்" என்ற படத்தில் நடித்தார், இப்படத்தில் சரிவர படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என குற்றம் கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு தடை விதித்தது. தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு மீது சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தது.
இதனையடுத்து நடிகர் சிம்பு தரப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மீது மானநஷ்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தது, அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார், அபராத தொகையை வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். நடிகர் சிம்பு தரப்பு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டது குறிப்பிடத்தக்கது.