Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரம் நடிக்க மறுத்த அலைபாயுதே - #21YearsOfAlaipayuthey - சுவாரஸ்ய தகவல்கள்!

விக்ரம் நடிக்க மறுத்த அலைபாயுதே - #21YearsOfAlaipayuthey - சுவாரஸ்ய தகவல்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2021 7:30 AM GMT

தமிழ் திரைத்துறையின் சிறந்த காதல் திரைப்படங்களை வரிசை படுத்தினால் முதல் 10 இடங்களில் இயக்குனர் மணிரத்னத்தின் காதல் படங்கள் இடம்பிடிக்கும். அதில் 'அலைபாயுதே' முக்கியமானதாக இருக்கும். 14 ஏப்ரல் 2000ல் வெளியான 'அலைபாயுதே' தற்போது இருபது வருடங்களைக் கடந்திருக்கும் வேளையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.

- சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த விளம்பரப்படத்தில் நடித்த இளைஞனின் புகைப்படத்தை, 'இருவர்' படத்தின் நடிகர் தேர்விலிருந்த மணி ரத்னத்திடம் காண்பித்தார். இருவர் படத்தினை முடித்தவுடன் இந்தியில் 'தில் சே' (தமிழில் உயிரே) படத்தினை துவங்கிய மணிரத்னம் சந்தோஷ் சிவன் கூறிய இளைஞரை அழைத்தார். அவர் தான் நடிகர் மாதவன். அவரை ஆடிஷன் எடுத்த மணிரத்னத்துக்கு அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருக்கமாட்டார் என முடிவு செய்து, பின்னர் நிச்சயம் அழைப்பதாகக் கூறி அனுப்பிவிட்டார். அதன் பின்னர் 'தில் சே' படத்தில் ஷாருக்கான் நடித்தார்.

- 'தில் சே' படத்திற்கு பின்னர் மீண்டும் காதல் திரைப்படம் செய்ய முடிவெடுத்த மணிரத்னம், தன் நண்பர் ஒருவர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கிய திரைக்கதை தான் 'அலைபாயுதே'. இதற்கு மாதவன் சரியாக இருப்பார் என்று எண்ணியவர் உடனடியாக அவரை அழைத்து நாயகனாக்கினார்.

- 'அலைபாயுதே' படத்தில் நாயகனைப் போல நாயகியையும் புதுமுகமாக அறிமுகம் செய்ய நினைத்த மணிரத்னம் முதலில் அந்த வேடத்திற்குத் தேர்ந்தெடுத்தது பாடகி - நடிகை எனப் பின்னாளில் அறியப்பட்ட வசுந்தரா தாசைத் தான். பின்னர் தான் ஷாலினியை கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

- அந்த சமயத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகப் பிரபலமாக இருந்த ஸ்வர்ன மால்யாவை, ஷாலினியின் சகோதரி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்.

- ஷாலினியை பெண் பார்க்க வரும் நபராக நடித்த கார்த்திக் குமாரை ஈவம் மேடை நாடகக் குழுவிலிருந்து கண்டறிந்து அறிமுகப்படுத்தியிருந்தார். முதலில் அந்த வேடத்திற்கு மணிரத்னம் அணுகியது விக்ரமை தான். அப்போது சேது படத்தில் நடித்துக் கொண்டிருந்த விக்ரம், அது சின்ன வேடமாக இருந்ததால் வாய்ப்பை நிராகரித்தார்.

- 'அலைபாயுதே' படத்தைப் பாடல்களே இல்லாத படமாக இயக்க நினைத்த மணிரத்னம் முதலில் பின்னணி இசையமைக்க மட்டும் தான் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்திருந்தார். பின்னர் 9 பாடல்களை அந்த படத்திற்காகப் பதிவு செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தின் பாடல்கள் தொகுப்பு ஹிட்டடித்தது.

- சிநேகிதியே, டும் டும் டும், காதல் சடுகுடு, எவனோ ஒருவன், பச்சை நிறமே, ரகசிய சிநேகிதனே, என்றென்றும் புன்னகை ஆகியவையெல்லாம் அலைபாயுதே படத்தின் பாடல் வரிகளைக் கொண்டு தலைப்பு வைக்கப்பட்ட படமாகும். அந்த அளவுக்குப் படத்தின் பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது.

- அலைபாயுதே படத்தில் கவுரவ வேடத்தில் குஷ்புவும் அவரது கணவராக அரவிந்த் சாமியும் நடித்திருப்பார்கள். அரவிந்த் சாமி நடித்த வேடத்தில் மோகன் லால் அல்லது ஷாருக் கானை நடிக்க வைக்கலாமா என்று ஆலோசித்தாராம் மணிரத்னம். அதன் பின்னரே அரவிந்த் சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.

- 'அலைபாயுதே' ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மணிரத்னத்துடன் இணைந்த நான்காவது படமாகும்.

- 'அலைபாயுதே' தெலுங்கில் 'சகி' எனும் பெயரில் டப் செய்யப்பட்டு பெரிய வெற்றியடைந்தது. இந்தியில் 'சாதியா' என்ற பெயரில் விவேக் ஓபராய், ராணி முகர்ஜி நடிக்க, மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றிய ஷான் அலி இயக்கினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News