100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி.. முதலமைச்சருக்கு நடிகர்கள், நடிகைகள் நன்றி.!
100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி.. முதலமைச்சருக்கு நடிகர்கள், நடிகைகள் நன்றி.!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 50 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்த நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். எனினும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், சிம்பு ஏற்கெனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர், மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கல் அன்று திரைக்கு வர உள்ள நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். தமிழக அரசுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி என கூறி உள்ளார்.
நடிகர் சிம்பு எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி என கூறி உள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார், திரையரங்குகளுக்கு 100 சதவீத அனுமதி என்பதைப் பார்க்க அற்புதமாக இருக்கிறது. முதல்வர், அமைச்சருக்கு நன்றி என்று ட்விட் செய்துள்ளார்.
இது திரையுலகுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் பொங்கலிலிருந்து தமிழ்த் திரைத்துறை மீண்டும் உயிர்த்தெழும் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் நன்றி கூறி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மிகப்பெரிய நன்றி என கூறியுள்ளார்.