Kathir News
Begin typing your search above and press return to search.

சமூகத்திற்கான கருத்து இருக்கும்.. நடிகர் விவேக் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்.!

தமிழ்த் திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் விவேக்கும் ஒருவர். திரைப்படங்களில் நடித்து பணமும், புகழும் ஈட்டுவதை மட்டுமே லட்சியமாகக் கொள்ளாதவர்.

சமூகத்திற்கான கருத்து இருக்கும்.. நடிகர் விவேக் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்.!

ThangaveluBy : Thangavelu

  |  17 April 2021 5:03 AM GMT

நடிகர் விவேக் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக இளைஞர் அணிச்செயலாளர் அன்புமணி ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த நடிகர்களில் ஒருவரான விவேக் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.




தமிழ்த் திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் விவேக்கும் ஒருவர். திரைப்படங்களில் நடித்து பணமும், புகழும் ஈட்டுவதை மட்டுமே லட்சியமாகக் கொள்ளாதவர். அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் சமூகத்திற்கான ஒரு கருத்து இருக்கும். குறிப்பாக சாமி திரைப்படத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள குழந்தைகளும் படிக்க வேண்டும்; அதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்ற மிகப்பெரிய செய்தியை நகைச்சுவை உணர்வும், விமர்சனமும் கலந்து பதிவு செய்திருப்பார்.

திரைப்படங்களை சமூக விழிப்புணர்வூட்டுவதற்கான ஊடகமாக கருதியவர்; பயன்படுத்தியவர். அதனால் தான் சின்னக் கலைவாணர் என்று திரைத்துறைக்கு வெளியில் உள்ளவர்களாலும் அழைக்கப் பட்டவர்.




சுற்றுச்சூழலைக் காப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். ஏராளமான மரங்களை நட்டவர். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசும், சமூகங்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு காணொலி பதிவு ஒன்றை நான் வெளியிட்ட போது, அதை மனமுவந்து பாராட்டியவர். விவேக் போன்றவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்ந்து சமூகத்திற்கு பணியாற்றியிருக்க வேண்டும். இளம் வயதில் அவரது மறைவை ஏற்க முடியவில்லை.

நடிகர் விவேக் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News