நடிகையை 2வது திருமணம் செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்.!
நடிகை ராதா பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார்.

நடிகை ராதாவை 2வது திருமணம் செய்த உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் நடிகை ராதா, இவர் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அடுத்த சில படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே நடிகை ராதா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில், என்னுடைய கணவர் வசந்தராஜா, என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு தெரியாமல் என்னிடம் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக என்னை அடித்து சித்ரவதை செய்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். நடிகை ராதா அளித்த புகார் சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி காவல்துறையினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே, ராதா புகார் குறித்து விசாரிக்க உதவி ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நடிகை ராதா பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார். தற்போது 4வது திருமணம் செய்து கொண்டதாக உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீது புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடையே இருவரிடமும் விசாரணை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்தபோது, திடீரென்று புகாரை நடிகை ராதா திரும்ப பெற்றார்.
ஆனாலும் உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீது தொடர்ந்து புகார் வந்ததால், இருவரும் சேர்ந்து உள்ள படம் பத்திரிகையில் வெளியானது. இதனால் போலீஸ் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவை சஸ்பெண்ட் செய்து, இணை கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார். உதவி ஆய்வாளர் 2வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.