Kathir News
Begin typing your search above and press return to search.

29ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் "பிரம்மாண்ட பிரம்மா இயக்குனர் ஷங்கர்'"

இயக்குனர் ஷங்கரின் 28 ஆண்டுகள் தமிழ் சினிமா

29ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்   பிரம்மாண்ட பிரம்மா இயக்குனர் ஷங்கர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 July 2021 12:00 PM GMT

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.





இயக்குனர் ஷங்கர், இந்த பெயரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கைதட்டுவர். அந்தளவிற்கு தமிழ் திரையுலகில் திரையில் பெயர் தோன்றும்போது கைதட்டல் வாங்கிய ஒரு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர். தன் வருமானத்தில் சொற்ப தொகையை கட்டணமாக செலவு செய்து இரண்டரை மணி நேரம் இருட்டில் அமர்ந்து படம் பார்க்க வரும் ரசிகனை திருப்திபடுத்த வேண்டும் என்பதே இயக்குனர்களின் பிரதான எண்ணமாக இருக்கும் ஆனால் அதில் ஒருபடி முன் சென்று ரசிகனை சாதாரண அளவில் திருப்தியடைய செய்வது மட்டுமின்றி காட்சிக்கு காட்சி பிரமிப்பை ஏற்படுத்தி இவ்வாறெல்லாம் சிந்திக்க முடியுமா? சிந்தித்ததை திரையில் கொண்டு வர இயலுமா? அதற்கான உழைப்பு சாத்தியமா என ரசிகர் மனதில் பல கேள்விகள் எழ செய்து மீண்டும் திரையரங்கிற்கு இழுக்கும் வசியக்காரன் இந்த ஷங்கர்.

தனது படைப்புகளில் கற்பனை, வியாபாரம் என்பதையும் தாண்டி சமூக சிந்தனை இல்லாமல் இவர் படைப்புகள் இருக்காது. கல்வி'க்கு ஏன் பணம்?, நடுத்தர வர்க்கம் கனவு காண்பது மட்டுமல்ல சாதிக்கவும் முடியும் என்ற எண்ணம், அரசு அதிகாரிகள் நினைத்தால் இந்தியா உயரும், அரசியல்வாதிகள் மாறினால் என்ன அதிசயம் நிகழும், கருப்பு பணம் ஒழிந்தால் என்ன ஆகும்? என்பது போன்ற இன்றைய சமுதாய தேவைகளை திரையில் சாதுர்யமாக நகர்த்தி காண்பித்திருப்பார் இந்த கும்பகோணத்துக்காரர்.





தன் முதல் படைப்பான 'ஜென்டில் மேன்'ல் கல்வி வியாபாரம் அல்ல என காட்டியது மட்டுமின்றி காசு செலவு செய்து படிப்பதால் திறமையானவர்கள் உருவாக இடம் கிடைப்பதில்லை என்ற அழுத்தமான கருத்தை கன கச்சிதமாக பதித்திருப்பார். ஆசைபட்ட படிப்பை படிக்க இயலாமல் கையில் அப்பள பையை தூக்கி வியாபாரத்திற்கு செல்லும் மாணவனின் அழுத்தமான மனநிலையை இன்றைய பல மாணவர்கள் அனுபவிக்கின்றனர்.

பின் அடுத்த படைப்பான 'காதலன்' சாதாரண இடைநிலை குடும்ப பையன் தன் காதலுக்காக எந்த ஒரு உயரத்தையும் எடுக்கும் முயற்சிகளை தனக்கே உரிய பிரம்மாண்டத்துடன் படைத்திருப்பார். பின்னர் ஷங்கர் எடுத்த அவதாரம்'தான் இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சனை! 'லஞ்சத்திற்கு எதிரான ஓர் மூத்த குடிமகனின் போராட்டத்தை 'இந்தியனாக' படைத்திருப்பார். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை புரையோடிப்போன லஞ்சத்தை அதன் பின்னணியிலான அரசு அலுவலகங்களை அப்பட்டமாக காட்சிபடுத்தியிருப்பார். ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த படத்தில் வரும் லஞ்சம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஏதேனும் ஒன்றை தன் வாழ்நாளில் அனுபவிக்காமல் இருக்க முடியாது.

பின்னர் இரட்டையர்கள் கலாட்டா 'ஜீன்ஸ' பொழுதுபோக்கு பட்டாசு.

அதன்பின் ஷங்கரின் ஆக்ரோஷம்தான் 'முதல்வன்', படித்த, நேர்மையான ஒருவனை முதல்வனாக்கினால் நாட்டில் என்னவெல்லாம் முன்னேற்றம் நிகழும் என்பதை இவர் படமாக்கியதே இன்றைய பல அரசியல்வாதிகள் கற்பனைக்கும், பல படங்களின் மைய கதைக்கும் விதை. மக்கள் இயல்பாகவே 'முதல்வன் அர்ஜுன்' போன்ற ஒரு முதல்வர் கிடைக்கமாட்டாரா என ஏங்க வைத்த கதாபாத்திரம் ஷங்கரின் கைவண்ணம்.

விடலை பருவ தப்புகளின் விளைவாக 'பாய்ஸ்', சிறிய அலட்சியங்களின் விளைவே பெரிய விபத்து என 'அந்நியனாகவும்',

சூப்பர் ஸ்டாரை சூப்பர் பாஸா'க காண்பித்த 'சிவாஜி'யாகவும் காண்பித்த இவரின் படைப்புகள் படம் அல்ல பாடம்.

பின்னர் இந்திய அளவில் இருந்த தமிழ் திரையுலகை உலக அளவில் கொண்டு சென்ற படைப்புதான் 'எந்திரன்', ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களே பார்த்து வியக்கும் அளவிலான நேர்த்தியை சூப்பர் ஸ்டார் எனும் ஆயுதம் கொண்டு செதுக்கினார் இந்த பிரம்மாண்டத்தின் மன்னன்.

அதனைதொடர்ந்த இவரின் படைப்புகள் பத்திகளில் சுருக்க முடியாதவை. 'ஐ', 'எந்திரன் 2.0' போன்றவைகள் இவரிம் மணிமகுடத்தில் வைரகற்கள். இப்படியான தமிழ் சினிமாவில் பெருமைபடக்கூடிய இயக்குனர் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக வலம் வருகிறார். ரசிகர்களோ இவரிடம் இருந்து இன்னம் பல பிரம்மாண்ட படைப்பகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





ஒரு மேடையில் இயக்குனர் பார்த்திபன் இவரை வைத்துக்கொண்டு கூறுவார், "எங்களிடம் எல்லாம் 100 கோடி குடுத்தால் 4 படங்கள் செய்துவிடுவோம்" என்று, அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் ஷங்கர் பேசும்போது கூறுவார், "நான் 100 கோடியில் 4 படத்தை பார்க்கும் திருப்தியை ஒரே படத்தில் தருவேன்" என. உண்மைதான் நான்கு படங்கள் அல்ல இவரின் ஒரு படம் பல படங்களை ஒரே நேரத்தில் பார்க்கும் திருப்தியை கண்டிப்பாக தரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News