தனிமைப்படுத்திய ரஜினி.. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதி.!
தனிமைப்படுத்திய ரஜினி.. படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதி.!

அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
சில பிரச்னைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி தான் மறுபடியும் தொடங்கியது. இந்நிலையில் தான், படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த படத்தில் ரஜினி, நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்து வந்த நிலையில் படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் படக்குழு, பரிசோதனை நடத்தியதாக தெரிகிறது.
அதன் முடிவில் நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஐதராபாத்தில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாத்த படப்பிடிப்பில் அடுத்தடுத்த சிக்கல் நீடிக்கும் சூழலில், படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.