இரவோடு இரவாக வீட்டை விட்டு புறப்பட்ட ரஜினி.. ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்.!
இரவோடு இரவாக வீட்டை விட்டு புறப்பட்ட ரஜினி.. ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்.!

நடிகர் ரஜினியின் பிறந்த நாளில் அவரை பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலர் போயஸ் கார்டனில் குவிந்தனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நடிகர் ரஜினிக்கு இன்று 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்திருந்தனர். சிலர் ரஜினியை போன்று வேடமிட்டும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும், ரஜினியை வெளியே வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சிலர் பெண்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ரஜினி நேற்று இரவே, வீட்டில் இருந்து கிளம்பி சென்றுவிட்டதாக, அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கிளம்ப வேண்டிய சூழல் உருவாகியது. ரஜினி ரசிகர்கள் குவிந்ததால் வீட்டின் முன்பு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதே போன்று மற்ற மாவட்டங்களிலும், அன்னதானம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பணிகளில் அவரது ரசிகர்கள் ஈடுபட்டிருந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, யாகம் நடத்தி மண் சோறு சாப்பிட்டால் நினைத்து நடக்கும் என்று ஐதீகம்.
வருடம்தோறும் ரஜினி பிறந்த நாள் அன்று, அவர் அரசியலுக்கு வர வேண்டி ரசிகர்கள் யாகம் நடத்தி மண் சோறு சாப்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு, ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்ததால், யாகம் நடத்தி கடைசியாக மண் சோறு சாப்பிட்டு நிவர்த்தி செய்தனர்.