சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
By : Kathir Webdesk
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சீரியல் நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர் தற்போது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், சையது ரோஹித் என்பவர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்து பணம் பறித்து வந்தவர். சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரா தற்கொலை பற்றி தனக்கு அனைத்தும் தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கு விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார். தற்போது சித்ரா தற்கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.