We Miss You கிரேஸி : கிரேஸி மோகனை இழந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன!
By : Mohan Raj
ஒருவர் மறைவுக்கு பிறகு அவரின் நினைவு வந்தால் 'அதற்குள் என்ன அவசரம் இன்னும் கொஞ்சநாள் இருந்துருக்கலாமே' என சிலருக்கே தோன்றும். அப்படி தோன்றுபவர்களில் முக்கியமானவர் வசனகர்த்தா, நாடகக்கலைஞன், திரைக்கதை ஆசிரியர் 'கிரேஸி மோகன்'. இவரால் சிரிக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது.
நாடக உலகில் துவங்கி 1988'ல் 'கதாநாயகன்' திரைப்படத்தில் வசனகர்த்தாவாக உயர்ந்து பின் 'அபூர்வ சகோதர்கள்' படத்தின் மூலம் திரையுலகில் அழியா இடம் பிடித்த 'கிரேஸி மோகனு'க்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
'போன் வந்துருக்கு' - 'யார் வந்தா என்னமா சாப்ட சொல்ல வேண்டியதானே' என நாகேஷ் பேசும் வசனத்தில் உள்ள குறுகுறுப்பான நகைச்சுவை அக்மார்க் கிரேஸியிசம். பின்னர் கமல்ஹாசனுடன் வசூல் ராஜா வரை கிரேஸியின் பயணம் தமிழ் சினிமா'வின் நாஸ்டால்ஜியா. ஒரு முறை பார்த்தால் மட்டுமல்ல ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாக பார்ப்பது போல் சிரிக்க தோன்றுபவை கிரேஸியின் நகைச்சுவை எழுத்துக்கள். இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது, ஒருவரின் ஊனம், தோற்றம் இவற்றை கேலி செய்யும் வசனங்கள் இருக்காது, பக்கத்தில் இருப்பவர்களை அர்த்தமற்று அடித்து பேசும் நகைச்சுவை இருக்காது இப்படியான காட்சிகள் இல்லாமல் போகிற போக்கில் காட்சிகளுடன் கூடிய நகைச்சுவையை மனதில் விதைத்து சிரிப்பை அறுவடை செய்துவிடுவார் இந்த மயிலாப்பூர்'காரர்.
"கிராமமும் 'குக்'! நீங்களும் 'குக்'கா", "என்ன சாம்பார்'ல போட்ட மீன் நீந்தறது?", "அங்க ஒரு தடியன், இங்க ஒரு பொடியன் பல சைஸ்'ல ஆள் வச்சுருக்கான்யா" என்பது போன்ற கதையுடன் கூடிய 'மைக்கேல் மதன காம ராஜன்' வசனங்கள். "நான் ஐயர் இல்லை ஆனா சத்தியமா ஊமைப்பா" என்ற மாறுவேஷ 'அவ்வை ஷண்முகி' காமெடி கலாட்டாக்கள். 'காதலா காதலா' ஆள் மாறாட்ட வைபோகங்கள், "டாக்டர் உடைய எச்சில் என்றால் அதுவும் மருந்துதானே" என பயந்தே சாகும் தெனாலியின் ஹாஸ்யங்கள், "உங்களை வச்சுக்கிட்டு கொலை கூட பண்ண முடியாதுடா" ன்ற நண்பர்களின் கொலைபய கலாட்டா பஞ்ச தந்திரங்கள், "என்னய்யா அது பூட்ட கேஸ்? ஒரு வேளை பூட்டு போட்ட சூட்கேஸா இருக்குமோ?" போன்ற அதிரிபுதிரி வசூல்ராஜா மருத்துவமனை சிரிப்புகள் என கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு வரலாற்றை தன் வசனங்களால் படைத்து சென்றுவிட்டார் கிரேஸி.
நகைச்சுவை மன்னன் கவுண்டமணி மற்றும் கிரேஸி மோகன் இணைந்ந கலாட்டா என்றால் கேட்கவா வேண்டும்? "சேதுராமன்கிட்ட ரகசிமா?", "ஜோசப்'ன்னா கிரிஸ்டியனாதான் இருப்பாரு பின்ன சைவ சிந்தாந்த மடாதிபதியாவா இருப்பாரு?", "இது வியட்நாம் காலணியா? இல்லை செவுட்நாம் காலணியா?", "இவன் வெங்கடகிருஷ்ணன் இல்லை சங்கடகிருஷ்ணன்" என கவுண்டமணியின் டைமிங் கலாட்டாவுடன் கிரேஸியின் வசனங்கள் அடிப்போலியாக இன்றும் பார்த்தால் சிரிக்க தோன்றும்.
மேலும், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, மிஸ்டர் ரோமியோ, அருணாச்சலம், ரட்சகன், பூவெல்லாம் கேட்டுப்பார், பம்மல் கே சம்மந்தம் என 90'களில் பிற்பகுதியில் இவர் வசன சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினார்.
இன்றும் மனதில் ஏதும் பாரமிருந்தால் கிரேஸியின் வசனம் உள்ள படங்களை சிலர் தேடி பார்ப்பதை பார்த்திருக்கிறோம். அந்தளவிற்கு வலி நிவாரணியாக கிரேஸி யின் எழுத்துக்கள் விளங்கியிருக்கின்றன.
இன்னும் பல வசனங்களை படைத்து வரலாற்றில் பல உள்ளங்களை சிரிக்க வைக்க மக்களுக்கு குடுத்து வைக்கவில்லை, நல்லோர்கள் நம்மைவிட்டு சீக்கிரம் பிரிந்துவிடுவர் என்ற கூற்று கிரேஸி விஷயத்திலும் தவறவில்லை. மகா நகைச்சுவை எழுத்தாளனை நாம் இழந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கொரோனோ-வுடன் சண்டையிட வாய்ப்பு கிடைத்த நமக்கு இந்த கிரேஸியின் வசனங்களை இன்னும் கொஞ்சம் கேட்க குடுத்து வைக்கவில்லை.