பட்டாக்கத்தியால் ஏன் கேக் வெட்டினேன்.. போலீசாருக்கு பயந்து நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை.!
பட்டாக்கத்தியால் ஏன் கேக் வெட்டினேன்.. போலீசாருக்கு பயந்து நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை.!

தமிழகத்தில் மாணவர்கள் அல்லது பொதுமக்கள் யாரேனும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியிருந்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பார்கள். ஆனால் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளுக்கு பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி அவருடன் பணிபுரியும் மற்ற திரைப்பட கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து கேக் வெட்டியுள்ளனர். அப்போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஒரு நடிகரா இருந்து கொண்டு ரவுடியை போன்று எப்படி கத்தியால் கேக் வெட்டலாம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘’எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான் பட்டாகத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
தற்போது உருவாகிவரும் படத்தில் இந்த பட்டாகத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். படக்குழுவினருடன் கொண்டாடியபோது அதே கத்தியை வைத்து கேக் வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இனிமேல் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன். யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
இதுவே ஒரு சாதாரண மக்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியிருந்தால் இந்நேரத்திற்கு அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பார்கள். ஆனால் ஒரு நடிகர் என்பதால் அவரை எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.