பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தாய்.. சித்ரா மரணம் குறித்து சின்னத்திரை நடிகர் குமரன் உருக்கம்.!
பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தாய்.. சித்ரா மரணம் குறித்து சின்னத்திரை நடிகர் குமரன் உருக்கம்.!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை நடிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
முதன் முதலில் தொகுப்பாளினி, அப்புறம் டான்ஸர் என சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு பல முகங்கள் இருந்தாலும் அவரை மிகவும் பிரபலமாக்கி ரசிகர்களை சேர்த்தது என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல்தான். கதிர், முல்லை ஜோடிக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. சீரியலில் எதிர்பாராத விதமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொள்ளும் முல்லைக்கும் கதிருக்கும் இடையே மலரும் காதல் மிகவும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியல் புரோமோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றால் அது மிகையாகாது. அப்படி வெளியாகும் பாண்டியன் ஸ்டோர் புரோமோவில் முல்லை, கதிரை காட்டாவிட்டால் கண்டனமே தெரிவிக்கும் ரசிகர்களும் உண்டு.
இந்நிலையில், சித்ராவின் மரணம் குறித்து கதிராக நடித்த நடிகர் குமரன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவில் சித்ராவின் புகைப்படத்தை பகிர்ந்து ‘‘உன்னுடைய தைரியத்தால்தான் நீ அறியப்பட்டாய். பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தாய். நீ எதிர்த்து போராடி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், இது பதிலல்ல’’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். இன்றைய முகநூல் பக்கங்களிலும் நடிகை சித்ராவுக்கு ஆதரவான கருத்துகளை அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.