முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் - விமானப்படையிடம் ஒப்படைப்பு!
By : Shiva
முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத இலகு ரக வாகனத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்து இந்திய விமான துறையிடம் ஒப்படைத்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவில் இலகுரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய விமானப்படைக்கு தேவையான குண்டு துளைக்காத இலகுரக வாகனம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அசோக் லேலாண்ட் நிறுவனத்திற்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனம் லாக்கீட் மார்ட்டின் என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் குண்டுதுளைக்காத வாகனத்தை தயாரித்து முடித்துள்ளது.
இந்த வாகனம் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த 'CVNG' (Common Vehicle Next Generation) வாகனத்தின் மேம்பட்ட தயாரிப்பாகும். இந்த வாகனம் சேறு, மண், பாறை உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் எளிதாக பயணிக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் கொண்ட வாகனமாகும்.
இந்த வாகனம் இந்திய விமானப் படைக்கு தேவையான உபகரணங்கள் ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் விமானப்படை வீரர்கள் 6 பேர் வரை பயணிக்கலாம் என்றும் அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த குண்டு துளைக்காத இலகுரக வாகனம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று இந்திய விமானப்படை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.