"கொரோனாவிலும் பொருளாதார சக்திவாய்ந்த நாடாக திகழும் இந்தியா" - அமெரிக்க நிபுணர் புகழாரம்!
By : Shiva
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவிய நிலையிலும் உலக அளவில் இந்தியா 'உலகில் மிகப்பெரிய சக்தியாக' இருப்பதாக சவுதி அரேபியாவில் வெளியான நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடிப்படையில் பலம் வாய்ந்த இந்தியா, தொற்றில் இருந்து மீண்டு சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாறும் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணருமான டாக்டர் ஜான்.சி.ஹல்ஸ்மேன், Arab News என்ற அரபு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் "இந்திய அரசியல் அதிகாரம அமைப்பு என்பது நிலையானது. மோடி மற்றும் பாஜக அரசியல் ரீதியாக பாதுகாப்பானதாக இருப்பதால் அதனை மற்ற வளரும் நாடுகள் பார்த்து பொறாமை மட்டுமே அடைய முடியும்" என்று தெரிவித்தார்.
வலிமையான அரசியல் கட்டமைப்பை கொண்ட இந்தியா இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட 11.5 சதவிகிதம் வளர்ச்சியை அடையும் என்று சர்வதேச நிதி ஆணையம், IMF தெரிவித்துள்ளது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைய இருக்கும் ஒரே பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என்றும் டாக்டர் ஜான்.சி.ஹல்ஸ்மேன் தெரிவித்தார்.
இந்தியா 2024-ஆம் ஆண்டிற்குள் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை மக்கள் தொகையில் மிஞ்சும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருந்த போதிலும் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் 25 வயதிற்குட்பட்டவர்களாகவும், 65 சதவிகிதத்துக்கு அதிகமானோர் 35 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியாவில் வலுவான அரசியல் கட்டமைப்புகளால் இந்தியா தொடர்ந்து பலமிக்க நாடாக இருக்கும் என்றும் பொருளாதார ரீதியாக உலகில் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் என்றும் டாக்டர் ஜான்.சி.ஹல்ஸ்மேன் தெரிவித்தது அரபு நியூஸ் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Business Standard