6.5% வளர்ச்சியுடன் வேகமான பொருளாதார நாடாக உருவெடுக்கும் இந்தியா!
2025-26 ஆம் நிதி ஆண்டில் 6.5% வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சர்வதேச நிதியம் தெரிவித்தது.

2025 - 26 ஆம் நிதி ஆண்டில் 6.5% வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சர்வதேச நிதியம் தெரிவித்தது.அதிக தனியார் முதலீடு மற்றும் பொருளாதார நிலை தன்மை போன்ற காரணங்களால் இது சாத்தியப்படும் எனவும் தெரிவித்தது. இது குறித்து ஐ.எம்.எப் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-
2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்.2047 இல் வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுக்க இந்தியா நிர்ணயத்துள்ள இலக்கை அடைய நிலையான பொருளாதார சூழல் ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதே சமயத்தில் உயர்தர வேலை வாய்ப்புகள், தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்கள், மனிதவள மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கை அதிகரித்தல் போன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.
குறிப்பாக தனியார் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க எளிமையான வணிகம், நிர்வாக சீர்திருத்தங்கள், வர்த்தக ஒருங்கிணைப்பு, வரி குறைப்பு மற்றும் வரி விலகல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கத்தை தவிர்த்து ரிசர்வ் வங்கி நிர்ணயத்த வரம்புகுள்ளேயே பணவீக்கம் இருந்தது என தெரிவிக்கப்பட்டது.2024-25 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.