வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை
விலை உயர்வை கட்டுப்படுத்த தனது இருப்பில் மூன்று லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு விடுவிக்க முடிவு செய்துள்ளது.
By : Karthiga
நாட்டில் தக்காளி, இஞ்சி, கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருள்களுடன் வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஏற்கனவே 50 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் மத்திய அரசு விற்பனை செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது மூன்று லட்சம் டன் வெங்காயத்தை விடுவிக்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை முடிவு செய்துள்ளது.
தேசிய வேளாண் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அதிகாரிகளுடன் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டன. வெங்காயத்தின் சில்லறை விலை அகில இந்திய சராசரியை விட அதிகமாக இருக்கும். மாநிலங்களில் முக்கிய சந்தைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின் வணிக தளங்களில் மின் ஏலம் மற்றும் சில்லறை விற்பனை செய்வது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மொத்தம் மூன்று லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது மராட்டிய மாநிலம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தலா ஒன்றை இலட்சம் டன் வெங்காயத்தை தேசிய வேளாண் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை கொள்முதல் செய்துள்ளன.
தேவைப்படும்போது இது மேலும் அதிகரிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது மத்திய அரசின் கையிருப்பில் வெங்காயத்தின் அளவு கடந்த நான்கு ஆண்டுகளில் மும்மடங்கு உயர்ந்திருக்கிறது. 2020- 21 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் டன்னாக இருந்த வெங்காயம் 2023 - 24 ஆம் ஆண்டில் மூன்று லட்சம் டன்னாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE :DAILY THANTHI