ஐயர் கடையில் அசைவம் விற்பதாகப் பரவும் சர்ச்சை: உண்மையில் என்ன நடந்தது?
By : Kathir Webdesk
ஐயர் நடத்தும் டிஃபன் கடையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
டிஃபன் கடை ஒன்றின் பெயர்ப் பலகை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ராம் ஐயர் டிபன் கடை. சைவம் மற்றும் அசைவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேலே உள்ள போஸ்ட்டில் “அவாளே மாறிட்டாள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராமணர்கள் நடத்தும் உணவகத்தில் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன என குறிப்பிட்டுப் படத்தை பகிர்ந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் படத்தைப் பகிர்ந்தது போல உள்ளனர்.
சைவம் மற்றும் அசைவம் என்பது தனியாக எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மேற்கு மாம்பலத்தில் இந்த கடை இருப்பது தெரியவருகிறது. கடையின் தொலைபேசி எண் எதுவும் கிடைக்கவில்லை. கூகுள் மேப்பில் கடையின் உணவு பட்டியல் கிடைத்தது. அதில், அந்த கடையில் சைவ உணவுகள் மட்டும் விற்பனை செய்யப்படுவதைக் காண முடிந்தது.
கடையின் பெயர்ப்பலகை புகைப்படத்தில், “ராம் ஐயர் டிபன் கடை. முதல் மாடியில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் மாடியில் என்று குறிப்பிட்டிருந்ததை எடிட் செய்து சைவம் மற்றும் அசைவம் என்று சேர்த்திருப்பது தெரிந்தது.
சைவ உணவுகள் மட்டும் விற்பனை செய்யப்படும் கடையில், அதுவும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெயரில் இயங்கும் கடையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்ய தொடங்கிவிட்டார்கள் என்று அவதூறான தகவலை பரப்பியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது