இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என பரவும் தகவல்!
By : Kathir Webdesk
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“கேரள அரசு கோவில்களில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்துள்ளது தற்போது ஹனுமான் ஜியின் உருவ சிலைக்கு சாராயம் பரிமாறப்படுகிறது இறைச்சி பரிமாறப்படுகிறது அல்லா ஹோ அக்பர் என்று கோஷமிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த கேடு கெட்டவர்கள் அழிக்கிறார்கள் நம்மை.” என்று இந்த வீடியோ தகவல் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
இது உண்மையில் வடக்கு கேரளாவில் பாரம்பரியமாக நடைபெறும் தெய்யம் நடனம் அது என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது.
கேரளாவின் காசர்கோட்டில் இஸ்லாமிய ஆராதனையுடன் துவங்கும் தெய்யம் நடனம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாப்பிரியன் – மணிச்சி தெய்யம் என்னும் இந்த நடனம், காசர்கோட்டின் மடிகை கோவிலில் நடைபெறுகிறது. சமய ஒற்றுமையை எடுத்துக்காட்டும் நடனம் என்னும் இந்த தெய்யம் ஆட்டம் குறித்து செய்திகள் வெளியாகி உள்ளது.
“வடக்கு கேரளா மற்றும் கர்நாடகாவில் பெரும்பாலும் ஆடப்படும் இந்நடனத்தில் சில இடங்களில் இஸ்லாமிய பாத்திரங்களும் இடம் பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிச்சி தெய்யம் மற்றும் பாப்பிரியன் தெய்யம் ஆகியவை இஸ்லாமிய தெய்ய நடனங்கள் என்றும், இந்து தெய்ய நடனக்கலைஞர்கள் இஸ்லாமிய தொழுகை வாசங்களுடன் இதில் நடனம் புரிவார்கள் என்றும் அறிந்து கொண்டோம். வடக்கு கேரளாவில் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் மாப்பிள்ளமார் என்று அறியப்படுகிறார்கள்.
எனவேதான், இந்த தெய்ய ஆட்டம் மாப்பிள்ள தெய்யம் என்று அழைக்கப்படுகிறது. கிட்டதட்ட 15 வகை மாப்பிள்ள தெய்யம் ஆட்டங்கள் உள்ளன. இந்து சமயத்தினராலேயே இத்தெய்ய ஆட்டம் நடத்தப்படுகிறது. சமய ஒற்றுமையை மேற்கோள் காட்டும் வகையில் காலம்காலமாக இஸ்லாமிய கதாப்பாத்திரங்களுடன் இந்த தெய்யம் ஆட்டம் நடைபெற்று வருகிறது
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என்பதாக பரவும் வீடியோ தகவல் தவறானது