மேற்கு வங்காள முதற்கட்ட தேர்தல் குறித்து வைரலாகிவரும் போலி கருத்துக்கணிப்பு புகைப்படங்கள்!
By : Janani
மார்ச் 27 இல் இருந்து மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டம் தொடங்கியது. இதில் 84 சதவீதத்திற்கு மேலாக வாக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து "ABP நியூஸ்" முதற்கட்ட தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பை நடத்தியதாக ஒரு புகைப்படம் வலம்வருகின்றது.
அதில், 30 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டனர். அதில் திரிணாமூல் காங்கிரஸ் 23 முதல் 26 தொகுதிகளில் வெற்றிபெறும் மற்றும் பா.ஜ.க 1 முதல் 3 தொகுதிகளிலும் மற்றும் இடது- காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு பரப்பப்பட்டதைத் தொடர்ந்து அந்த புகைப்படத்தை வைத்து ஒரு பேஸ்புக் இடுக்கில்,"ABP நியூஸ் அறிக்கையின் படி, முதற்கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 23 முதல் 26 தொகுதியில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் மூன்றாவது முறையாக மம்தா பனர்ஜீ மே 2 முதலமைச்சராகப் பதவி ஏற்பார்," என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகைப்படம் முற்றிலும் மார்பிங் செய்யப்பட்டது என்று இந்தியா டுடே நியூஸ் கண்டறிந்துள்ளது. ABP நியூஸும் இதையே உறுதி செய்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, வாக்குப்பதிவு முடியும் வரை வாக்கெடுப்புக்கு முடிவுகள் குறித்து எந்த அறிக்கையையும் ஒளிபரப்ப அனுமதி இல்லை.
மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை மேற்கு வங்காளத்தில் எட்டுக்கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றது. மேலும் மே 2 இல் அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மேலும் மார்ச் 26 இல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், காலை 7 மணி மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 மாலை 7.30 மணிவரை நடைபெறும் சட்டமன்ற மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிடத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ABP நியூஸ் முதற்கட்ட தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிடச் சாத்தியமில்லை. ABP நியூஸ் அல்லது வேறு செய்தி ஊடகங்கள் இதுபோன்ற கருத்துக் கணிப்பை வெளியிடுவதை நாங்கள் காணவில்லை.
இதுகுறித்து பேசிய ABP நியூஸ் தலைவர் சஞ்சய் பிராக்தா, தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறுவதாக உள்ளதால் இதுபோன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை என்று அவர் உறுதி செய்தார். "தற்போது வைரலாகி வரும் புகைப்படம் போலியானது. தேர்தலுக்கு நடுவில் இதுபோன்று கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை" என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து ABP நியூஸ் தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் தெளிவுபடுத்தியும் உள்ளது.
எனவே தற்போது வைரலாகி வரும் மேற்கு வங்காள தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு போலியானது ஆகும். ABP நியூஸ் அதுபோன்ற கருத்துக்கணிப்பை வெளியிடவில்லை என்பதே உண்மை.