முதல்வர் யோகி தவறான சொற்களைப் பயன்படுத்தினாரா? வைரல் வீடியோ உண்மையா?
By : Janani
ஏப்ரல் 5 ஆம் தேதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார்.
தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறும் மற்றும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக்கப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவில் முதல்வர் யோகி தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வீடியோவின் இறுதியில் யோகி தகாத வார்த்தையைப் பயன்படுத்தினார் என்று கூறப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிரபல ட்ரோலிங் பக்கங்களில் ட்விட்டாக பகிரப்பட்டு வந்தது. வயர் நிறுவனத்தின் ஊழியரும் யோகி ஆதித்யநாத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி வீடியோவை பகிர்ந்தார். ஆம் ஆத்மீ கட்சியும் 'சன்ஸ்க்ரி அல்லாத மொழியை' பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி வீடியோவை பகிர்ந்திருந்தது.
பெரும்பாலும் இந்த வீடியோவானது இடதுசாரி ஊடகங்களிலும், எதிர்க்கட்சிகளாலும் மற்றும் வதந்திகள் பரப்புபவர்களாலேயே பகிரப்பட்டு வந்துள்ளது. அரசாங்க வட்டாரங்களின் படி, இந்த வீடியோவின் கடைசி மூன்று விநாடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தடயவியல் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தகவல் ஆலோசகர் ஷலப் மணி திரிபாதி, முதல்வர் குறித்த எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.