மார்ச் 31 வரை அனைத்து ரயில்களும் நிறுத்தமா? உண்மை என்ன ?

By : Janani
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவ தொடங்கிய காலகட்டத்தில் இருந்து அதனை வைத்துப் பல போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றன. எனவே நாம் படிக்கும் செய்திகள் அனைத்தையும் முழுமையாக உண்மை என்று நம்பிவிடக் கூடாது, அதிலிருக்கும் உண்மையை ஆராய்ந்து நம்பவேண்டும். தற்போது அது போன்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் வரும் அனைத்து ரயில்களும் மார்ச் 31 வரை நிறுத்தப்படுகின்றன என்று கூறப்பட்டு வருகின்றது. மேலும் இந்த செய்தி குறித்த டிவி சேனல் ஒன்றின் புகைப்படமும் பரப்பப்பட்டு வருகின்றது. இதனால் ஏற்கனவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த பலர் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்.
இருப்பினும் இந்திய ரயில்வே இதுபோன்ற செய்தி ஒன்றை அறிவிக்கவில்லை. தற்போது வைரலாகி வரும் புகைப்படம் கொரோனா தொற்றுநோய் பரவ தொடங்கியபோது மார்ச் 2020 இல் எடுக்கப்பட்டது. மேலும் இந்த செய்தி குறித்துச் சரிபார்த்த PIB, "மார்ச் 31 வரை ரயில்கள் நிறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவி வருகின்றது. இருப்பினும் அது பழைய செய்தியாகும். மார்ச் 31 2021 வரை ரயில்களை நிறுத்த இந்திய ரயில்வே முடிவெடுக்கவில்லை," என்பதைத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 22 அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்தது. இதுபோன்று சமூக வலைத்தளங்களில் போலியான மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவது குறித்த உண்மையைக் கண்டறியப் பத்திரிகை தகவல் அமைச்சகம் 2019 டிசம்பரில் ஒரு குழுவை அமைத்தது. சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தவறான செய்திகள் குறித்த உண்மையைக் கண்டறிவது அவசியம் என்று அந்த குழு தெரிவித்தது.
