விஸ்வகர்மா யோஜனா திட்டம்.. தி.மு.க பரப்பும் அவதூறு.. லெப்ட், ரைட் வாங்கிய IMK தலைவர் அர்ஜுன் சம்பத்..
By : Bharathi Latha
"விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் ஐந்தொழில் செய்பவர்கள் சலவை, சவரம், செருப்பு தைக்கும் தொழில், கூடை முனைதல் உட்பட அனைவருமே கைவினைஞர்கள். இவர்களுக்கு பயிற்சி மானியம் கொடுத்து செயல்படுத்தப்படும் திட்டம்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டம். இதை குலத்தொழில் என்று முத்திரை குத்தி தடை செய்ய பார்க்கும் திராவிட மாடல்" என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார். குறிப்பாக வானதி சீனிவாசன் அவர்களின் பேச்சை குலத்தொழில் ஆதரவு பேச்சாக திசை திருப்பும் முயற்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது என்று குற்றமும் சாட்டி இருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது, "குலத்தொழில் என்பது அவமானமா? செய்யும் தொழிலே தெய்வம்! கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்! கவலை இல்லை ஒத்துக்கொள்! என்பது தமிழ் முதுமொழி! வேண்டுமென்று திமுக ஊடகங்கள் உள்நோக்கத்துடன் விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள். ஜாதி முத்திரை குத்துகிறார்கள். நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப் படும் திட்டத்தின் மூலம் குடிசைத் தொழில் கைவினைஞர்கள்,பொம்மை செய்பவர்கள்,கூடை முனை பவர்கள்,ஓவியம் தீட்டுபவர்கள் சிற்பங்கள் செய்பவர்கள், அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் சாதி முத்திரை குத்தி சாதி வெறியை தூண்டி இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்கிறார்கள். வானதியின் பேச்சு நியாயமான பேச்சு, மத்திய அரசாங்கத்தின் ஒரு நல்ல திட்டத்தை குறித்து விவரமாக பேசி இருக்கிறார்.
விஸ்வகர்மா மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் திராவிட மாடல் சதிகளை முறியடிக்க,விஸ்வகர்மா சமூகத்தின் தன்மான உணர்வை சுயமரியாதையை தட்டி எழுப்பும் வகையில் வானதியின் பேச்சு அமைந்துள்ளது. ஆனால் அதனை திரித்து வேண்டுமென்று உள்நோக்கத்துடன் விவாத பொருளாக்கி,விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் விஸ்வகர்மா மக்கள் பயன் பெறாத வகையில் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள விஸ்வகர்மா மக்கள் உஷாராக இருக்க வேண்டும். மத்திய அரசு நேரடியாக இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News