இந்தியா மீது மைக்ரோவேவ் தாக்குதலா? பொய் செய்தி வெளியிட்ட சர்வதேச ஊடகங்கள்.!
இந்தியா மீது மைக்ரோவேவ் தாக்குதலா? பொய் செய்தி வெளியிட்ட சர்வதேச ஊடகங்கள்.!

By : Yendhizhai Krishnan
இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது மைக்ரோ வேவ் அலைக்கற்றையை வைத்து தாக்குதல் நடத்தியதாக பிரபல நாளிதழ்களில் வந்த செய்தி தவறானது என்று PIB தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக PIB வெளியிட்டுள்ள அறிக்கையில் சில சர்வதேச செய்தி இணைய தளங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு உள்ளதாகவும் இந்திய- சீன எல்லை நிலைப்பாடு தொடர்பான ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று சீன ராணுவத்தினர் மைக்ரோவேவ் ஆயுதத்தை பயன்படுத்தி லடாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மைக்ரோவேவ் ஆயுதத்தை பயன்படுத்தி இந்திய ராணுவத்தின் நிலையை தற்போது இருந்த இடத்தில் இருந்து சீன ராணுவம் பின்வாங்க செய்துள்ளது என்றும் வேறு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் முற்றிலும் மைக்ரோவேவ் மூலம் சீன ராணுவம் இதை சாதித்ததாகவும் தி டைம்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்தச் செய்தி பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட ரென்மின் பல்கலைக்கழக பேராசிரியரான ஜின் கன்ராங் கூறிய கூற்றுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதுபோன்ற எந்த சம்பவமும் லடாக் பகுதியில் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறி இவை போலியான செய்திகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் PIB பதிவிட்டு உள்ளது.
