மக்களை கொஞ்சம் உஷாராக இருங்கள்... இது முற்றிலும் போலியானதாம்.. எச்சரித்த மத்திய அரசு..
By : Bharathi Latha
தற்போது சமீபத்தில் பல்வேறு நபர்களின் மொபைல் எண்ணிற்கு தங்களுடைய எண் துண்டிக்கப்பட போவதாக பல்வேறு போலி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதை முற்றிலும் போலியானது என்று மத்திய அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தங்கள் மொபைல் எண் துண்டிக்கப்படப் போவதாக வரும் போலி அழைப்புகள் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்தும் தொலைத் தொடர்புத் துறை ஆலோசனை வழங்கியது.
இதுபோன்ற அழைப்புகள் மூலம் இணையதள குற்றவாளிகள் இணையதளக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளை செய்ய திட்டமிட முயற்சிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் இது போன்ற அழைப்புகளைச் மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய மோசடி அழைப்புகள் தொடர்பான தகவல்களை www.sancharsaathi.gov.in/sfc என்ற இணையதள இணைப்பில் புகாரளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இணையதள குற்றங்கள், நிதி மோசடிகள் போன்றவற்றைத் தடுக்க இவ்வாறு புகாரளிப்பது உதவும். இணையதளக் குற்றங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ பயன்படுத்தலாம் எனவும் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: News