திராவிட மாடலில் பிளக்ஸ் பேனரால் மூடப்பட்ட பேருந்தின் மேற்கூரை.. வைரலாகும் வீடியோ காட்சி..
By : Bharathi Latha
சங்கரன் கோவிலில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பிளக்ஸ் பேனரால் மூடப்பட்டு சாலையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த பேருந்தில் பயணிக்கும் மக்களின் நிலைமை என்ன? திராவிட மாடலில் இதுதான் மக்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பா? என்றெல்லாம் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வலுவாக எழுந்து வருகிறது. குறிப்பாக நெட்டிசன்கள், "திராவிட மாடலில் பெண்களுக்கு இலவச பேருந்து என்று கூறி, தற்போது ஓட்ட, உடைசல் பேருந்தில் மக்களை பயணிக்க வைக்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் 34B என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சங்கரன்கோவில் முதல் ராயகிரி வரை செல்லும் பேருந்து ஆகும். இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த அரசு பேருந்தில் மேற்கூரை இல்லாததால், பிளக்ஸ் பேனரால் மூடப்பட்டிருந்தது.
தற்போது காற்றின் வேகம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இதனால் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போது காற்றின் வேகத்திற்கு மேற்கூரையில் மூடப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் ஆடிக் கொண்டிருந்தது. இதனை அப்பகுதியில் சென்ற சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். இந்த ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Input & Image courtesy:News 24