தீயாய் பரவும் வீடியோ.. மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? எதிர்க்கட்சிகள் விமர்சனம்..
By : Bharathi Latha
அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள்:
மேற்குவங்கத்தில் உள்ள ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவரை நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இதை கூடி நின்று பார்ப்பவர்கள், தாக்குதலை நிறுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, தாக்கியவருக்கு உதவுவது போல் தெரிகிறது. ஒரு நபர் பிரம்பால் அடிக்கும் காட்சிகள் நம்முடைய மனதை கலங்க வைக்கிறது. ஒரு கட்டத்தில், அந்த ஆண் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உதைக்கிறார். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
எங்கு நடந்த சம்பவம் இது?
மேற்கு வங்காளம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவில் இந்த சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர். இந்த வாரத்தில்தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பெண்ணை தாக்குபவர் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தஜேமுல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி அதிகாரத்துடன் தான் இந்த நபர் வெறிகொண்டு இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என்று உள்ளூர் வட்டாரங்கள் தகவல்களை தெரிவிக்கின்றது. தலிபான்கள் பாணியில் விரைவாக நீதி வழங்கும் அமைப்பாக இருக்கும் 'இன்சாப் சபா' வழங்கிய உத்தரவின் பேரில்தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம்:
இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் மீது பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை:
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இந்த ஒரு சம்பவத்துக்கு பா.ஜ.க ஊடக பிரிவு தலைவர் அமித் மாளவியா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இதுகுறித்து அவர் கூறும்போது, "மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களின் சாபக்கேடு மம்தா பானர்ஜி ஆட்சி. மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News