சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்: பிரச்சனைக்கு தீர்வு காணுமா தமிழக அரசு?

பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி சென்னை DGP வளாகம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற வாசகத்துடன் கூடிய சிவப்பு நிறத்திலான 'டி ஷர்ட்' அணிந்திருந்தனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூறும் போது,பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு நடத்தப் பட்டு அதில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு உத்தரவாதம் இல்லை. எங்களின் கனவுகளை நிறைவேற்ற காலிப் பணியிடங் களை அதிகரித்தால்தான் முடியும்.
இது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர், துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட்டுவிட்டோம். தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக எங்களை நியமிக்கலாம். நாங்கள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுப்போம். விரைவில் வரவுள்ள தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.