இளைஞர்களிடம் அதிகரிக்கும் வன்முறை கலாச்சாரம்: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

இளம் தலைமுறை இடையே வன்முறை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது, இதற்கு அவர்கள் வளரும் சூழ்நிலையும் ஒரு காரணம். தமிழகத்தில் தற்பொழுது 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்களே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கூறும் போது, கொரோனாவுக்கு பின் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடும் மாணவர்கள் இடையே அதிகரித்துள்ளதால், அதன் மூலம் பல விஷயங்களை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கற்றுக் கொள்கின்றனர். பலர் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகின்றனர். இதிலிருந்து சிறுவர்களை மீட்க முடியாமல் பெற்றோர்கள் அவதிப்படுகின்றனர்.
அதேபோல் பிறந்த நாள் கேக் வெட்டினால் கூட அரிவாளால் வெட்டுவது ஃபேஷன் என இளைஞர்களின் மத்தியில் மோகம் பிறந்துள்ளது. இந்நிலையில் ஆயுத வடிவிலான எழுதப் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெற்றோரை கவலை அடையச் செய்கிறது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ள பேனா பென்சில் போன்ற எழுது பொருள்கள், கத்தி துப்பாக்கி அரிவாள் போன்ற ஆயுதங்களைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற ஆயுத வடிவிலான எழுதுபொருட்களை ஆரம்பத்திலே தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இவ்வாறு விற்பனை செய்யும் பொருட்களின் உற்பத்தியை தமிழக அரசு தடை விதித்து, ஏற்கனவே விற்பனையில் உள்ள ஆயுத வடிவங்களில் ஆன எழுது பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
மாணவர்கள் பலர் அதை ஸ்டைலாக பயன்படுத்துவதால் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனதில் வன்முறையை விதைக்கும். எப்படி பப்ஜி விளையாட்டை தடை செய்தனரோ அது போன்று. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்வாறான ஆயுதங்களின் வடிவிலான எழுதுபொருட்களையும் நிச்சயம் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உற்பத்தியை தடை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.