FactCheck: நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் பிரதமர் இல்லம் வாடகைக்கு விடப்படுகிறதா?
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் இஸ்லாமாபாத்தின் சிவப்பு மண்டலத்தில் (Red Zone) 137 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.
By : Saffron Mom
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வ இல்லம் வாடகைக்கு விடப்படுவதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தது. பாகிஸ்தானின் மோசமான பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஆங்கில இணையதளமான சாமா நியூஸில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய செய்திகள் வெளிவந்தன. பாகிஸ்தான் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பிரதமரின் இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக இந்த செய்திகள் தெரிவித்தன.
கச்சேரி, திருவிழாக்கள், ஃபேஷன் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான ஒரு சமூக மையமாக PM ஆவாஸைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின.
இது மட்டுமின்றி, இந்த நிகழ்வுகளின் போது ஒழுக்கம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை உறுதிப்படுத்த இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டது.
உண்மை என்ன?
பாகிஸ்தானின் பிரதமரின் செயலக வட்டாரங்களின் படி, இதுபோன்ற ஒரு திட்டம் சமீபத்திய கூட்டத்தில் வந்ததாகவும் ஆனால் அது ஒப்புதல் பெறவில்லை மற்றும் எந்தவொரு குழுவும் அமைக்கப்படவில்லை என்று BBC விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் இம்ரான் கான் உட்பட சிலர், அரசு குடியிருப்பு காலியாக இருப்பதால் அதை வாடகைக்கு விடும் முடிவை வரவேற்பதாகவும், மற்றும் சிலர் இது ஒரு அரசு சொத்து மற்றும் ஒரு அடையாள முக்கியத்துவம் கொண்டது. இதை வாடகைக்கு கொடுப்பது பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தையும் முக்கியத்துவத்தையும் குறைக்கும் என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒருமித்த கருத்து இல்லாததால், அது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் இஸ்லாமாபாத்தின் மிகவும் செழிப்பான பகுதியில் உள்ள சிவப்பு மண்டலத்தில் (Red Zone) 137 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமரின் இல்லத்தை பொதுப் பல்கலைக்கழகமாக மாற்றுவதாக அவர் உறுதியளித்ததும், ஆகஸ்ட் 2019 இல், பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமரின் வீட்டை காலி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாக்கிஸ்தான் இருக்கின்ற நிதிநிலைக்கு, இதுபோன்ற செய்திகளை உண்மை என மக்கள் எளிதில் நம்பியது ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இவை எதிர்காலத்தில் உண்மையானாலும் ஆச்சர்யப்படுவதில்லை.
Cover Image Courtesy: India Today