கொரோனா பரவல் அச்சம்: பிரதமரின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து!

By : Bharathi Latha
இந்தியா ஐரோப்பா நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாட்டு வணிகம், காலநிலை மாற்றங்கள், முதலீடு மட்டுமன்றி டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி செல்வது எப்படி? என்பது போன்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப் படுகின்றன. ஆனால் இந்தியாவிலும், மற்றும் உலக நாடுகளிலும் கொரோனா தொற்று நோயின் மோசமான இரண்டாவது அலை தாக்கம், மிகவும் அதிகமாக உள்ள காரணத்தினால் பிரதமர் அவர்களின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல் செல்வதாக இருந்த பயணம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் 16 வது மாநாடு போர்ச்சுக்கல் நாட்டில் மே 8ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பங்கேற்க இருந்தார்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பிரதமரின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டினை இணையதளம் வாயிலாக நடத்த, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஏற்கனவே பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
